‘ஓபன் கிராண்ட் மாஸ்டர் ‘ போட்டி எழும்பூரில் நாளை துவக்கம்
சென்னை,சர்வதேச அளவிலான சென்னை ‘ஓபன் கிராண்ட் மாஸ்டர்’ சதுரங்கப் போட்டி, எழும்பூரில் நாளை துவங்கி, 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அகில இந்திய சதுரங்க கழக ஆதரவுடன், தமிழ்நாடு சதுரங்க கழகம் மற்றும் சக்தி குருப் இணைந்து மகாலிங்கம் கோப்பைக்கான 15வது சென்னை ஓபன் இன்டர்நேஷனல் கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி — 2024, எழும்பூரில் உள்ள, தனியார் ஹோட்டலில், நாளை துவங்கி, 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.
போட்டியில், ‘ஏ’ பிரிவில் 2,000 ரேட்டிங் மேல், ‘பி’ பிரிவில் அதற்கு குறைவானோர்; ‘சி’ பிரிவில், 1,800 ரேட்டிங் குறைவானோர் பங்கேற்க உள்ளனர்.
இதில், 22 நாடுகளைச் சேர்ந்த, 17 கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் 27 வெளிநாட்டு வீரர்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டோர் விளையாட உள்ளனர்.
இதில் மொத்தம், 10 சுற்றுகளாக சுவிஸ் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இரண்டு நாட்கள் மட்டும் இரண்டு சுற்றுகள் வீதமும் மற்ற நாட்களில் நாளொன்றுக்கு ஒரு சுற்றும் நடக்க உள்ளது.
இந்த தொடரில் மொத்த பரிசு தொகையாக, 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. ‘ஏ’ பிரிவில், 20 லட்சம் ரூபாய், பி மற்றும் சி பிரிவில், தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
பிரதானமான ‘ஏ’ பிரிவினருக்கான போட்டிகள் எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலிலும், ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவினருக்கு பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கிலும் நடக்க உள்ளது.