பண்டைய இலக்கியங்கள் எக்காலத்திற்கும் ஏற்றவையே எழுத்தாளர் மாலன் பேச்சு
சென்னையில் நடந்துவரும் புத்தகக் கண்கண்காட்சியின் நான்காம் நாளான நேற்றைய மாலை நிகழ்வில், ‘சின்னஞ்சிறு கதைகள்’ எனும் தலைப்பில், எழுத்தாளர் மாலன் பேசினார்.
அதில் அவர் பேசியதாவது:
முந்தைய காலத்தில் புத்தகங்கள் எழுதி வெளிவருவது என்பதும், அதை வாங்கி படிப்பது என்பதும், மிக கடினமானது.
ஆனால், இன்றைய காலகட்டத்தில், புத்தகம் வெளிவருவது மட்டுமின்றி, அதை சந்தைப்படுத்துவதும் எளிது. ஆனால், அன்று வாசிப்பு பழக்கம் அதிகம். இன்று குறைவு.
பெண்கள் எழுத்தாளர்களாக தடை செய்யப்பட்டிருந்த காலத்திலேயே, தன்னை நிரூபித்தவர் ராஜம் கிருஷ்ணன். அவரின் பெயரில் ஒரு சிற்றரங்கம் அமைந்திருப்பது, மிகவும் பாராட்டுதலுக்குரியது.
வரலாற்றை படிப்பது என்பது, மிகவும் அவசியமானது. ஏனெனில், வரலாற்றை படிக்கும் போது தான், நாம் எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் என்பது தெரியும். இலக்கியம் என்பது கண்களால் காண்பது, கண்களால் காண இயலாத அன்பு, காதல், காமம், ஆசை, கோபம், துரோகம் உள்ளிட்டவை என, இரு வகைகள் மட்டுமே.
குறுந்தொகை போன்ற பண்டைய இலக்கியங்களை, இக்கால படைப்பாளிகள் இச்சூழலுக்கேற்றவாறு, இன்றும் பயன்படுத்துகின்றனர். எனவே, நம் பண்டைய இலக்கியங்களை, நாம் படித்தறிந்து கொள்வது மிகவும் நன்று.
இவ்வாறு அவர் பேசினார்.