கர்ப்பிணியை திருப்பி அனுப்பியதால் குழந்தை இறந்தது அரசு மருத்துவ மனையை உறவினர்கள் முற்றுகை
தண்டையார்பேட்டை : வியாசர்பாடி சர்மா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தர்மதுரை. இவரது மனைவி காமாட்சி (24), நிறைமாத கர்ப்பிணி. நேற்று முன்தினம் ஸ்கேன் எடுப்பதற்காக ராயபுரத்தில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு நேரம் ஆகிவிட்டதால் வெளியே சென்று ஸ்கேன் எடுத்துக் கொண்டு வர மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து காமாட்சி வீட்டுக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து காமாட்சிக்கு வலி ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை வந்தபோது மருத்துவர்கள் பிரசவ தேதி 13.1.2025 என்பதால் நீங்கள் வீட்டுக்கு சென்று விட்டு பிறகு வாருங்கள் என்று அனுப்பி உள்ளனர்.
காமாட்சி ஆட்டோவில் கொருக்குப்பேட்டை மீனம்பாக்கம் நகர் வழியாக சென்றபோது மீண்டும் வலி ஏற்பட்டு வழியில் குழந்தை பிறந்து, இறந்துள்ளது. அதை தொடர்ந்து கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் காமாட்சிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல றிந்த காமாட்சியின் உறவினர்கள் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் குழந்தை இறந்து உள்ளது என்று கோஷம் எழுப்பினர்.