அடையாறு மண்டலத்தில் சீர்கேடு குப்பை தரம் பிரிப்பதில் அலட்சியம்
அடையாறு: அடையாறு மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. கோட்டூர்புரம், கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி பகுதிகளை உள்ளடக்கி, இந்த மண்டலம் உள்ளது
இங்கு, குப்பை சேகரிக்கும் பணியை, உர்பேசர் சுமித் நிறுவனம் செய்கிறது. தினமும், 4.70 லட்சம் கிலோ குப்பை சேகரிக்கப்படுகிறது.
இதில், உரமாக 28,800 கிலோ, மறுசுழற்சியாக 17,500 கிலோ, 1,700 கிலோ பிளாஸ்டிக் என தரம் பிரிக்கப்படுகிறது.
மீதமுள்ள, 4.22 லட்சம் கிலோ குப்பை, பெருங்குடி குப்பை கிடங்கு செல்கிறது. குப்பையை தரம் பிரிக்க, வார்டுகள்தோறும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவை முறையாக செயல்படுவதில்லை. பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி குப்பையை முறையாக தரம் பிரித்து, அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டும்.
ஆனால், தரம் பிரிப்பு மையங்களில், குப்பை மலை போல் குவிந்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
திறந்த வெளியில் கொட்டப்பட்டு உள்ளதால், அதில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதனால், பகுதிவாசிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். குப்பையை தரம் பிரிக்கும் மையத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கவும், தரம் பிரிக்கவும் போதிய ஊழியர்கள் உள்ளனர். கண்காணிப்பு இல்லாததால், தரம் பிரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் வருகிறது.
பொதுமக்கள் புகார் குறித்து, வார்டு பொறியாளர்கள் கூறினால், உர்பேசர் சுமித் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இது குறித்து, கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.