கீழ்ப்பாக்கம் மறக்கடிக்கப்பட்ட ஜெ. ஜெ. , அரங்கு விளையாட்டு வீரர்கள் அதிருப்தி
கீழ்ப்பாக்கம்: விளையாட்டுத் துறையின் தலைநகராக மாறி வரும் சென்னையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள அரசு விளையாட்டு அரங்கு பாழடைந்து கிடப்பது, வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
பிற மாநிலங்கள் உற்றுநோக்கும் வகையில், தமிழகஅரசு விளையாட்டுத் துறைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும், பிற நாடுகள் வியக்கும் வகையில், உலக செஸ் ஒலிம்பியாட், கார் ரேசிங் உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்திக் காட்டியது.
ஒருபுறம் வளர்ச்சி
அது மட்டுமல்லாமல், உலகத் தரத்திற்கு இணையாக சென்னையில் நேரு விளையாட்டு அரங்கம், உள்விளையாட்டு அரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம், டென்னிஸ் அரங்கம், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல், தொகுதிவாரியாக தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், கபடி உள்ளிட்ட மைதானங்கள் அமைக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு, சென்னை செம்மஞ்சேரியில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இப்படி, விளையாட்டுத் துறையில் சென்னை நகரம் வளர்ச்சிப் பாதையில் நோக்கி செல்லும் நிலையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு விளையாட்டு அரங்கு பாழடைந்து கிடக்கிறது.
அண்ணா நகர் மண்டலம், கீழ்ப்பாக்கம் பகுதியில், முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா பெயரில் கூடைப்பந்து மைதானம் உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கம், பார்வையாளர்கள் இடம், வீரர்கள் தங்குமிடம், திறந்தவெளி விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட எண்ணற்ற வசதிகள் உள்ளன.
சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள இந்த அரங்கத்தை முறையாக பராமரிக்காததால், தற்போது பாழடைந்து பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது.
சென்னையில் விளையாட்டுப் போட்டிகள் என்றால் நேரு விளையாட்டு அரங்கம், நேரு பார்க்கில் மட்டுமே நடத்தப்படுகின்றன.
மறுபுறம் அலட்சியம்
முக்கிய போட்டிகள் நடப்பதால், உடனுக்குடன் ‘புக்’ செய்யப்படுவதால், இங்கு இடம் கிடைக்காமல், வண்டலுார் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள விளையாட்டு பல்கலையில் போட்டி நடத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வீரர்கள் இங்கிருந்து அங்கு செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
இது குறித்து, தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் பொதுச்செயலர், இந்திய பயிற்சியாளர் சுரேஷ்பாபு, 40, கூறியதாவது:
தமிழக அரசு விளையாட்டுத் துறையை மலைமேல் நிறுத்தியுள்ளது. ஜெ.ஜெ., அரங்கில் கூடைப்பந்து மட்டுமின்றி, கிக் பாக்சிங், பாக்சிங், கராத்தே, சிலம்பம், வாள் வீச்சு, ரோல்பால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் விளையாடலாம்.
தற்போது, நேரு அரங்கம்மற்றும் நேரு பார்க் மைதானத்தையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இல்லையெனில், வண்டலுார் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சென்னையில் பல்வேறு திட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன. அதேபோல், ஜெ.ஜெ., ஸ்டேடியத்தையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிக் பாக்சிங் பயிற்சிக்கு தகுந்த இடம்
நான் உலகப் போட்டிகள் வரை பங்கேற்று பதக்கம் வென்றுள்ளேன். போட்டிகளில் பங்கேற்க, தொடர்ந்து ஒரே இடத்தில் பயிற்சி பெற வேண்டும். ஆனால், போதிய அரங்கங்கள் சென்னையில்
கிடையாது. கிக் பாக்சிங்கை பொறுத்தவரை, போதிய பயிற்சி இடம் இல்லாமலே பதக்கங்களை குவித்து வருகின்றனர். தனியாக பயிற்சி இடம் அமைத்துக் கொடுத்தால், தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்க வாய்ப்புள்ளது. இதற்காக, ஜெ.ஜெ., அரங்கத்தை சீரமைத்து கொடுத்தால், சென்னை மட்டுமின்றி பிற மாவட்ட வீரர்களும் தங்கி பயிற்சி எடுக்க வசதியாக இருக்கும்.
– ஏ.பி.வசீகரன், 20, கிக் பாக்சிங் வீரர், அண்ணா நகர்
1996 முதல் பயிற்சி பெறுகிறேன்
அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைப்பது விளையாட்டு மட்டுமே. வீரர்களையும் ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ., அரங்கில், கடந்த 1996 முதல் கூடைப்பந்து விளையாடி, பயிற்சி பெற்று, பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை பெற்றுள்ளேன். இந்த விளையாட்டு மைதானத்தால், நான் உட்பட ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். பாழடைந்துள்ள மைதானத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், பயிற்சி பெற வசதியாக இருக்கும்.
– மைம் கோபி, 47, நடிகர், கூடைப்பந்து வீரர், அயனாவரம்