காதலியுடன் தகராறு வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை
பெரம்பூர்:ஓட்டேரி தேவி பவானி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தன் முக்கியா (25). ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 6 வருடங்களாக சென்னையில் சமையல் வேலை செய்து வந்தார். சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது அறையில் குடியிருக்கும் 2 நண்பர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியுள்ளனர்.
நீண்ட நேரம் தட்டியும் சந்தன் முக்கியா கதவைத் திறக்காததால் அருகில் வசிக்கும் அவரது அண்ணன் பாச்சியான் என்பவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வரவழைத்துள்ளனர். அவர் வந்து கதவை உடைத்து பார்த்தபோது சந்தன் முக்கியா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சந்தன் முக்கியா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சந்தன் முக்கியா தனது சொந்த ஊரான ஒடிசா மாநிலத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அப்பெண்ணிடம் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது. தொடர்ந்து இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.