ஓட்டலில் பணம் தர மறுத்து தகராறு; வழக்கறிஞருக்கு வெட்டு
வேளச்சேரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் சுதன்குமார் (27). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். இவரது நண்பர் கருணாகரன். இவரும் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு, வேளச்சேரி, ஏ.எல்.முதலி தெருவில் உள்ள கடையில் பிரட் ஆம்லெட் சாப்பிட்டுள்ளனர். போதையில் இருந்த கருணாகரன் கடைகாரர்களிடம் பணம் தரமுடியாது என கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடை ஊழியர் அருண், கடை உரிமையாளரின் நண்பரான சதீஷ்குமாரிடம் கூறி உள்ளார். இதையடுத்து கடைக்கு வந்த சதீஷ்குமார் (34), அவரது நண்பர்கள் ராஜா (29), ராஜசேகர் (29) ஆகியோர் சேர்ந்து கருணாகரனை சரமாரியாக தாக்கி, கத்தியால் வெட்ட முயன்றனர்.
இதை தடுக்க முயன்ற சுதன்குமார் கையில் வெட்டு விழுந்தது. அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரது கையில் 6 தையல் போடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார், ராஜா, ராஜசேகர் ஆகியோரை ேநற்று கைது செய்தனர்.