மனைவியை எரித்து கொன்ற கணவரும் தீயில் கருகி பலி
படப்பை, தாம்பரம், படப்பை அருகே ஆதனுார் ஊராட்சி, ஜெயலட்சுமி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் செந்தில்குமார், 44; டெய்லர்.
இவரது மனைவி கலையரசி, 38. அரசு அங்கன்வாடி ஊழியர். இவர்களுக்கு, 20 மற்றும் 15 வயதில், இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, செந்தில்குமார், கலையரசி துாங்கிக் கொண்டிருந்த அறையில் தீப்பற்றி எரிந்தது.
பெற்றோரின் அலறல் சத்தத்தை கேட்டு, பக்கத்து அறையில் துாங்கிக் கொண்டிருந்த மகள்கள் கூச்சலிட்டதையடுத்து, அருகில் வசிப்போர் மறைமலை நகர், மணிமங்கலம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர்.
பலத்த தீக்காயங்களுடன் இருந்த இருவரையும் மீட்ட போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். மணிமங்கலம் போலீசார் செந்தில்குமாரிடம் விசாரித்தனர்.
அதில், மகேந்திரா சிட்டி அருகே உள்ள வீராபுரம் கிராமத்தில் பணியாற்றிய கலையரசி, அதே பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகருடன் பழகியதும், அதையறிந்த செந்தில்குமார், மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, பின் தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இந்நிலையில், கலையரசி சிகிச்சை பலனின்றி, நேற்று காலை 11:00 மணிக்கு உயிரிழந்தார்.
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற செந்தில்குமார், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.