நாட்டிய நாடகத்தில் பக்தி பரவசம்

கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சார்பில், விதியுஷி சம்யுக்தா குழுவினரின் ‘ஹரிகர ஸ்தல மகிமை’ நாட்டிய நாடகம், மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் அரங்கில், நேற்று நடந்தது.

ஹிந்துக்களின் புனித ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஹரிஹரபுரத்தின் மகிமையை விளக்கும் விதமாக அரங்கேற்றப்பட்ட நாடகம், ஹரிஹரபுரம் சங்கராச்சாரிய ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சுவாமிகளின் முன்னிலையில் நடந்தது.

தட்ச பிரஜாபதி யாகம் செய்த ‘யாகபூமி’யாகவும், அகத்தியர் தவமியற்றிய ‘தவபூமி’யாகவும், சனாதன தர்மத்தை ஆதிசங்கரர் செழிக்கச் செய்த ‘ஞானபூமி’யாகவும், இந்த புனித ஸ்தலம் உள்ளது.

இந்த ஸ்தலத்தின் வரலாறு மற்றும் மகிமை குறித்து, 90 நிமிடங்கள் உரைக்கிறது விதியுஷி சம்யுக்தா குழுவினரின், ஹரிகர ஸ்தல மகிமை நாட்டிய நாடகம்.

நித்திஷின் மனமுறுகும் புல்லாங்குழல் ஓசையுடன், ‘ஐந்து கரத்தானை யானை முகத்தினை’ என, முதற்கடவுள் விநாயகரை துதித்து, துவங்கியது நிகழ்ச்சி. பார்வையாளர்களை பக்தர்களாக மாற்றி, அப்படியே நிறுத்தி, இறுதியில் பக்திப் பரவசத்துடன் வழியனுப்பி வைத்தது.

தேவர் கடன், ரிஷி கடன், பித்ரு கடன், மனித கடன், பூத கடன் என, மானுடர்களின் ஐந்து கடமைகளாக ஆதி சங்கரர் அருளிய கடமைகள் குறித்தும், அவற்றுக்கான விளக்கம் குறித்தும் அற்புதமாக உரைத்த விதம் அரங்கை நிசப்தமாக்கி, அனைவரையும் இப்பிறவிக்கான முக்கியத்துவம் குறித்து சிந்திக்கத் துாண்டியது.

நரசிம்மராக தோன்றிய ரக் ஷனா, ஒட்டுமொத்த நடனத்தையும் வடிவமைத்து, தக் ஷனாக அவதரித்த சம்யுக்தா, பார்வதி தேவியாக வருகை தந்த கிருத்திகா ஆகியோரின் முகபாவனைகளும், நடன அசைவுகளும், அவரவர் தனித்துவத்தை நிலைநிறுத்தின.

– நமது நிருபர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *