சேலையூரில் அதிர்ச்சி : மருந்து கடையில் ஊசி: கல்லுாரி மாணவர் பலி
சேலையூர், சேலையூர், சந்திரன் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை; மீன் வியாபாரி. இவரது மனைவி விசாலாட்சி. தம்பதிக்கு நான்கு மகன்கள். கடைசி மகன் சந்தோஷ், 19; தனியார் கல்லுாரி மாணவர்.
கடந்த 22ம் தேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சந்தோஷை அழைத்து, சிட்லப்பாக்கம், ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தாய் விஷாலாட்சி சென்றுள்ளார்.
மருத்துவமனை மூடியிருந்ததால், அருகே உள்ள ‘ராகவேந்திரா’ மருந்து கடையில் கேட்டுள்ளார். அங்கிருந்த ஜெயந்தி, 49, என்பவர், சந்தோஷுக்கு ‘டெம்பரேச்சர்’ பார்த்து, 110 டிகிரி பாரன்ஹீட் காய்ச்சல் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், இரண்டு ஊசி போட்டு, மாத்திரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
சந்தோஷ் வீட்டிற்கு சென்று, மாத்திரை போட்டு துாங்கியுள்ளார். மறுநாள் காலை, ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, 24ம் தேதி மருந்து கடைக்கு சென்று கேட்டுள்ளனர். அதற்கு, ‘தைலம் தேய்த்துவிட்டால் சரியாகிவிடும்’ எனக்கூறி அனுப்பியுள்ளனர்.
வலி அதிகமானதை அடுத்து, சந்தோஷை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஊசி போட்டதால், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
பணம் செலவு செய்ய முடியாததால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சந்தோஷை சேர்த்தனர். அங்கும் மருத்துவர்கள், அதையே கூறியுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இந்த நிலையில், மருந்து கடையில் போடப்பட்ட ஊசியால் தான் மகன் இறந்ததாக, அவரது பெற்றோர் சேலையூர் போலீசில் நேற்று புகார் அளித்தனர்.
இதற்கிடையில், சந்தோஷ் மரணத்திற்கு, மருந்து கடையில் போடப்பட்ட ஊசி தான் காரணம் எனக்கூறி, அவரது நண்பர்கள், மருந்து கடையை அடித்து நொறுக்கினர்.
இதையடுத்து கடை மூடப்பட்டது. சம்பவம் தொர்டபாக, சேலையூர் போலீசார், மருந்து கடை உரிமையாளர் ஜெயந்தி, 49, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.
பி.ஏ., படித்துள்ள ஜெயந்தி, 20 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தி வருவதாகவும், ‘தான் ஊசி போடவில்லை’ என, போலீசாரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.