நிலத்தடி நீர் வாரியம் நடவடிக்கை : 96 கிராமங்களில் நிலத்தடி நீர் எடுக்க.. .தடை!:
காஞ்சிபுரம்:சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 96 குறுவட்டங்களில் தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் திறந்தவெளி கிணறு தோண்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. நிலத்தடி நீரை உயர்த்துவதற்காகவும், முறைகேடான தண்ணீர் விற்பனை தடுக்கவும், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், நிலத்தடி நீரை உயர்த்தும் நடவடிக்கையாக, மழைநீர் சேகரிப்பு திட்டம், பூங்காக்கள் நடுவில் ஸ்பாஞ்ச் பூங்கா உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகின்றன.
எனினும், பல இடங்களில் அனுமதியின்றி கிணறு அமைத்து, தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. தொழிற்சாலை, பெரிய வணிக வளாகங்கள் மற்றும் வீடு உள்ளிட்ட கட்டடங்கள் கட்ட, ஆழ்துளை கிணறு அமைத்து, தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது.
இதை அவ்வப்போது கண்காணித்து ஒழுங்குப்படுத்தும் பணியில், நீர்வளத் துறையின் கீழ் இயங்கும் நிலத்தடி நீராதார அமைப்பு செயல்படுகிறது.
இந்த அமைப்பு, அவ்வப்போது நகர் மற்றும் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு, நிலத்தடி நீர்மட்ட அளவு, அதன் தரம் ஆகியவற்றை சோதனை செய்கிறது. நீர்மட்டம் குறைந்தால், அதை உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.
திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில், அதிகளவு தண்ணீரை உறிஞ்சி பயன்படுத்துவதால், நிலத்தடி நீர் வற்றிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், நிலத்தடிநீரை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிலத்தடி நீர் மேலாண்மைக்கு நீர்வளத் துறை அறிவுரை வழங்கி உள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதி என்பவர், தனி நபர் கிணறு தோண்ட அனுமதி கேட்டு, மக்கள் குறைதீர் முகாமில் விண்ணப்பம் செய்தார். இதை பரிசீலித்த மாவட்ட அதிகாரிகள், விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர்.
அதற்கு காரணமாக கூறியுள்ளதாவது:
மத்திய நிலத்தடி நீர் வாரியம், நிலத்தடி நீரை நான்கு வகையாக பிரித்து கண்காணிக்கிறது.
அதாவது, ‘அதிகளவு எடுக்கப்பட்டுள்ளது; வெகுவாக குறைந்துள்ளது; ஓரளவு குறைந்துள்ளது; பாதுகாப்பாக உள்ளது’ என, வகைப்படுத்தி உள்ளது.
இதில், வில்லிவலம் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக இருப்பதால், அங்கு கிணறு தோண்ட அனுமதி கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அந்த வகையில், நான்கு மாவட்டங்களில், வருவாய் துறையின் கீழ் பிர்கா எனும் 164 குறு வட்டங்களில், 96 குறுவட்டங்களில் நிலத்தடி நீர் எடுக்கக்கூடாது என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், சில குறுவட்டங்களில் தண்ணீர் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் – 49, காஞ்சிபுரத்தில் – ஒன்பது, செங்கல்பட்டில் – 20, திருவள்ளூரில் 18 குறுவட்டங்கள் என, மொத்தம், 96 குறு வட்டங்களில் திறந்தவெளி கிணறு தோண்டக்கூடாது என குறிப்பிடப்பட்டு உள்ளது.
சென்னையில் புழல், சோழிங்கநல்லுார்; காஞ்சிபுரத்தில் பரந்துார், சிட்டியம்பாக்கம் உட்பட 16 குறு வட்டங்கள்; செங்கல்பட்டில் பாலுார், மதுராந்தகம் உட்பட 16 குறு வட்டங்கள்; திருவள்ளூர் மாவட்டத்தில் பொதட்டூர்பேட்டை, ஆரணி உட்பட 30 என, மொத்தம், 68 குறுவட்டங்களில் திறந்தவெளி கிணறு அமைக்கலாம் எனவும், நீர்வளத் துறை தெளிவுபடுத்தி உள்ளது.
நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக அரசின் நீர்வளக் கொள்கைபடி, தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், இதர வணிகப் பயன்பாட்டிற்காக நீர் எடுக்கும் நிறுவனங்களுக்கு தடை உள்ளது. அவர்கள் நிலத்தடி நீர் எடுக்க வேண்டுமென்றால், அதற்கான ஆணவங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். வீட்டு உபயோகத்திற்கு ஆழ்துளை கிணறு அமைப்பதில் தடை இல்லை.
அதேபோல், விவசாயத்திற்காக தனி நபர் கிணறு தோண்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சமுதாய கிணறு அல்லது விவசாயிகள் ஒருங்கிணைந்து கிணறு தோண்டிக்கொள்ள அனுமதி உள்ளது. அதுவும் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ள இடத்தில், இந்நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நடவடிக்கை, கிராமங்களில் நிலத்தடி நீரை சேமிக்க வழிவகுக்கும். மேலும், முறைகேடான திறந்தவெளி கிணறுகள் அமைப்பது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாவட்டம் குறுவட்டங்கள் மறுக்கப்பட்ட குறு வட்டங்கள் அனுமதிக்கப்பட்ட குறு வட்டங்கள்
சென்னை 51 49 2
காஞ்சிபுரம் 25 9 16
செங்கல்பட்டு 40 20 20
திருவள்ளூர் 48 18 30
மொத்தம் 164 96 68