சென்னை, புறநகர்களில் 5 புது துணைமின் நிலையம்
சென்னை, சென்னை மற்றும் புறநகர்களில் சீரான மின் வினியோகத்திற்கு, முன்னுரிமை அடிப்படையில் ஐந்து துணைமின் நிலையங்களை அமைக்க மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைத்தாலும், மின் சாதன பழுது காரணமாக மின்தடை ஏற்படுகிறது.
அதற்கு ஏற்ப கூடுதல் மின்சாரத்தை கையாள துணை மின் நிலையங்கள், மின்வழித்தடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
ஆனால் முக்கிய நகரங்களில், துணைமின் நிலையங்களுக்கு இடம் கிடைப்பதில் சிரமம் உள்ளது. சென்னை, சுற்றுவட்டார மாவட்டங்களிலும் மின்தேவை அதிகரித்து வருகிறது.
எனவே, துணை மின் நிலையம் அமைக்க இடம் அடையாளம் காணப்பட்டதில், நிலங்கள் தயாராக உள்ள இடங்களில் முன்னுரிமை அளித்து, துணை மின் நிலையங்களை அமைக்குமாறு மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை போரூர் ராமாபுரம்; செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பெருமாட்டுநல்லுார்; காஞ்சிபுரம் கட்டவாக்கம் ஆகிய இடங்களில், 110/ 11 கிலோ வோல்ட் திறனில், தலா ஒரு துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் ஐயம்பேட்டை மற்றும் செங்கல்பட்டு, ஹஸ்தினாபுரத்தில் தலா, 33/ 11 கி.வோ., திறனில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.