பெந்தகோஸ்தே சர்ச் போதகர் கைது : பிசாசு விரட்டுவதாக பாலியல் தொல்லை
சென்னை, பிசாசு பிடித்துள்ளதாக கூறி, வீட்டிற்கு அழைத்து ஜெபிப்பது போல நடித்து இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதகரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில், 26 வயது இளம்பெண் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த கெனிட்ராஜ், 47. அதே பகுதியில் உள்ள, பெந்தகோஸ்தே சர்ச்சில் போதகராக உள்ளார். அந்த சபைக்கு நான் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்று வந்தேன்.
சில வாரங்களாக, நான் அங்கு செல்லவில்லை. இதனால், கெனிட்ராஜ் என்னை தொடர்பு கொண்டு, ‘ஏன் சர்ச்சுக்கு வரவில்லை?’ எனக் கேட்டார். நான் மன உளைச்சலில் இருப்பதாகக்
கூறினேன்.
‘உன்னை கெட்ட ஆவி பிடித்து இருக்கலாம். எத்தனையோ பேருக்கு நான் பிசாசு விரட்டி உள்ளேன். உன்னை பிடித்த பிசாசை பிடரியில் அடித்து விரட்டுகிறேன். என் வீட்டிற்கு வா’ என, அழைத்தார்.
நான் அங்கு சென்றதும், பிசாசை விரட்ட ஜெபிப்பது போல, தொடக்கூடா இடங்களில் தொட்டார்; நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
இதனால், எனக்கு வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயன்றார். அவரின் பிடியில் இருந்து தப்பி வீடு வந்து சேர்ந்தேன்.
அதன் பின் மீண்டும் என்னை கெனிட்ராஜ் தொடர்பு கொண்டார். ‘என் வீட்டில் யாரும் இல்லை. இப்போது நீ வரவில்லை என்றால், எனக்கு இருக்கும் சக்தியை பயன்படுத்தி, உன் கணவரையும், குழந்தைகளையும் கொன்று விடுவேன்’ என மிரட்டினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கெனிட் ராஜை பிடித்து விசாரித்தனர். அவர், குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.