மாநகராட்சி அலட்சியம் குப்பையால் கால்வாய் நீரோட்டம் பாதிப்பு தொடரும்.
சென்னையில் கூவம், அடையாறு மற்றும் பகிங்ஹாம் கால்வாய் முக்கிய நீர்வழித்தடங்களாகும். இவற்றில் முக்கிய கால்வாய்களில் விருகம்பாக்கம் கால்வாயும் ஒன்று.
குறிப்பாக, அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட, சூளைமேடு, பாரி தெரு வழியாக, விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது. நெற்குன்றத்தில் துவங்கும் இக்கால்வாய், அரும்பாக்கம், சூளைமேடு வழியாக, 4 கி.மீ., துாரம் பாய்ந்து அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது.
இம்மாதம் துவக்கத்தில் மாநகராட்சியினர் துார்வாரும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மழைக்கு பின், முறையான பராமரிப்பு மேற்கொள்ளாததால், கால்வாயில் ஆங்காங்கே மீண்டும் பிளாஸ்டிக் குப்பை கழிவு நிறைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுள்ளது.
நோய் தொற்று உருவாகும் சூழல் உள்ளதால், கால்வாயை ஒட்டியுள்ள பாரி தெரு, கண்ணகி தெரு குடியிருப்போர் பீதியில் உள்ளனர். மேலும் மேம்பாலத்தின் கீழ்பகுதியில், நீராட்டம் தடைபட்டு உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.