மருத்துவமனையில் நோயாளிகள் அதிகரிப்பு : ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு பாதிப்பு
சென்னை, சென்னையில் உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு பாதிப்புக்குள்ளாகி, மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மழைப்பொழிவு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், உடல்நல பாதிப்பால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது தொடர்பான பரிசோதனையில், இ – கோலி எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஜீரண மண்டல சிகிச்சை நிபுணர் மணிமாறன் கூறியதாவது:
எஸ்கெரிச்சியா கோலி என்ற இ – கோலி என்பது மனிதர்கள், பாலுாட்டி விலங்குகளின் குடலில் வளரும் பாக்டீரியா.
இதில், பல வகைகள் உள்ளன. சில உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், சிலவகை பாக்டீரியா தீவிர பாதிப்பை ஏற்படுத்து
அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீர், பால் உள்ளிட்டவற்றின் வாயிலாக மனித உடலுக்குள் அவை செல்கின்றன. முறையாக சுத்தம் செய்யப்படாமலும், வேக வைக்காமலும் உட்கொள்ளும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகள். உரிய சிகிச்சை பெறாவிட்டால் ஒருகட்டத்தில், சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் வயிற்றுப்போக்கு பாதிப்பு, 40 சதவீதம் பேருக்கு உள்ளது. அனைத்துமே இ – கோலி பாதிப்பு இல்லை என்றாலும், பெரும்பாலானோருக்கு அதற்கான அறிகுறி காணப்படுகிறது.
இ – கோலி பாதிப்பை பொருத்தவரை மலப் பரிசோதனை, ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை வாயிலாக உறுதி செய்யலாம்.
அதன் அடிப்படையில் நீர்ச்சத்தை தக்க வைக்கும் சிகிச்சைகளும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சைகளும் வழங்கப்படும். அதை முறையாக பின்பற்றினால் முழுமையாக குணமடையலாம்.
இவ்வாறு கூறினார்.