சுனாமி 20ம் ஆண்டு நினைவு தினம்; காசிமேடு, மெரினாவில் மீனவர்கள் திரண்டனர்
சென்னை: சுனாமி தாக்கத்தின் 20ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு ஆகிய கடற்பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு மீனவர்கள், அரசியல் கட்சியினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். உலகம் முழுவதும் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது சுனாமி பேரழிவு. இதில் தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு நடந்து முடிந்து 19 வருடங்கள் நிறைவடைந்து, 20ம் ஆண்டு தொடங்குகிறது.
இதையொட்டி தங்கள் உறவுகளை இழந்த பலரும் நேற்று அந்தந்த கடற்கரை பகுதிக்கு சென்று உறவுகளை நினைத்து பூ தூவி, பால் தெளித்து அஞ்சலி செலுத்தினர். இதனால், நேற்று கடற்கரை பகுதிகள் சோகமயமாக காட்சியளித்தது. சுனாமி நிகழ்ந்த தினத்தை துக்க நாளாக அறிவித்து மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவான்மியூர், திருவொற்றியூர், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ெசலுத்தினர். சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவர் பேரவை சார்பில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
முன்னதாக பட்டினப்பாக்கம் கடற்கரையையொட்டிய சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார், த.மா.கா. பொதுச் செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், பிராமண சங்கத் தலைவர் நாராயணன் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஊர்வலமாக நடந்து வந்தனர். பின்னர், பட்டினப்பாக்கம் கடற்கரையோரம் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்களை தூவியும், கடலில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து மீனவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஒட்டல் வசந்த பவன் அதிபர் சீனிவாசன் ராஜா, ரவி, ராணி ரெட்டி, லயன் லிகி குமார் உள்பட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பாஜ சார்பில் மெரினா கடற்கரை நடுக்குப்பத்தில் பாஜ மாநிலச் செயலாளரும், காசிமேடு மீன் பிடித்து துறைமுக மேலாண்மை குழு உறுப்பினருமான எஸ்.சதீஷ்குமார் தலைமையில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா கலந்து கொண்டு சுனாமியில் உயிரிழந்தவருக்கு புஷ்பாஞ்சாலியும் மெழுகுவர்த்தியும் ஏற்றினார். தொடர்ந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட 500 மீனவ பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன. பிரதமரின் செல்வமகள் திட்டத்தில் மீனவ பெண் குழந்தைகளுக்கு “செல்வமகள்” வங்கி கணக்கு புத்தகத்தை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மீனவர் அணி மாநில செயலாளர்கள் சௌந்தர், கமலக்கண்ணன், சாம், கோவிலம்பாக்கம் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் சுமோசுரேஷ் ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் பொதுமக்களும் மணற்பரப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர் சென்னையில் உள்ள கடற்கரை பகுதியில் அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் நொச்சிக்குப்பம் கடற்கரை பகுதியில் மயிலாப்பூர் எம்எல்ஏ மயிலை த.வேலு தலைமையில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பகுதி செயலாளர் எஸ்.முரளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தையொட்டிய கடற்கரையோரத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.