தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 7 அடி நீள மலை பாம்பு: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
தாம்பரம்: வண்டலூர், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தீப். இவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு மலை பாம்பு ஒன்று செல்வதை கண்ட இவர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மலை பாம்பை பார்த்து அலயறித்து ஓடினர். பின்னர், இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கோழி கூண்டில் மலை பாம்பு பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர்.
பின்னர், பாம்பு பிடிக்கும் கருவி கொண்டு 7 அடி நீள மலை பாம்பை பிடித்து, வண்டலூர் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். குடியிருப்பு பகுதியில் மலை பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.