தென் மண்டல வாலிபால் போட்டி சென்னை பல்கலை சாம்பியன்
சென்னை, தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள, பல்கலை இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலை மைதானத்தில் நடந்தது.
ஐந்து நாட்கள், ‘நாக் அவுட்’ மற்றும் ‘லீக்’ முறையில் நடந்த இப்போட்டியில், 100க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்றன. இதில், சென்னை,கேரளா, எஸ்.ஆர்.எம்., -கோழிக்கோடு பல்கலை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதி போட்டிகள், ‘லீக்’ அடிப்படையில் நடந்தன. முதல், ‘லீக்’ போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியை எதிர்த்து களமிறங்கிய சென்னை பல்கலை அணி, அந்தப் போட்டியில், 25- – 11, 25- – 21, 25- – 23 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்த, ‘லீக்’ போட்டியில், கேரள பல்கலை அணியை, 25- – 22, 25- – 21, 25- – 23 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இறுதி ‘லீக்’ போட்டியில், பலம் வாய்ந்த கோழிக்கோடு பல்கலை அணியை, 21- – 25, 25 – -19, 25- – 22, 25- – 20 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, சென்னை பல்கலை சாம்பியன் பட்டத்தை வென்றது.
இரண்டாம் இடத்தை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியும், மூன்றாம் இடத்தை கோழிக்கோடு பல்கலை அணியும் வென்றன.