வண்டலுார் பூங்காவிற்கு 10,000 பேர் வருகை
தாம்பரம்,நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக திகழும் வண்டலுார் உயிரியல் பூங்காவில், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். குடும்பத்தினருடன் வந்து, விலங்குகளை பார்த்து ரசித்துவிட்டு செல்வர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, நேற்று காலை முதல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
ஒரு பகுதியினர், குடும்பத்தினருடன் கார்களில் வந்தனர். ஒரு பகுதியினர், பைக், பேருந்துகளில் வந்தனர்.
பூங்காவிற்குள் நுழைந்ததும், சிறுவர் பூங்கா உள்ளது. அங்கிருந்த விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், துருப்பிடித்தும் உள்ளன.
அவற்றை சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தன. அப்பணி முடிந்து, சிறுவர் பூங்கா நேற்று திறக்கப்பட்டது.
அதனால், பூங்காவிற்கு வந்த சிறுவர்கள், பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். அந்த வகையில், நேற்று மட்டும், 10,000 பேர் பூங்காவை கண்டு ரசித்தனர்.