கோட்டையில் வேட்டை 15 பூனைகள் சிக்கின
சென்னை, ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள பாரம்பரிய கட்டடத்தில், சட்டசபை அரங்கம், முதல்வர், அமைச்சர்கள், தலைமை செயலர் உள்ளிட்ட பலரது அலுவலகங்கள் உள்ளன. இதையொட்டிய, நாமக்கல் கவிஞர் மாளிகை, 10 மாடி கட்டடத்தில், பல்வேறு துறைகளின் செயலர் அலுவலகங்கள் உள்ளன.
அரசின் பழைய ஆவணங்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் என, பல இடங்களில் காகித வடிவில் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றை, பெருச்சாளி, மூஞ்சூறு உள்ளிட்டவை சேதப்படுத்தி வருகின்றன.
இதைத் தடுக்க, அரசு அலுவலர்கள் சிலர், 50க்கும் மேற்பட்ட பூனைகளை கொண்டு வந்து விட்டிருந்தனர். இந்த பூனைகளுக்கு, தாங்கள் சாப்பிடும் உணவையே, பாசத்துடன் வழங்கி வந்தனர். பூனைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக, கட்டடத்தை பராமரிக்கும் பொதுப்பணித் துறையினர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, நரிக்குறவர்களுடன் வந்த மாநகராட்சி ஊழியர்கள், 15க்கும் மேற்பட்ட பூனைகளை வேட்டையாடி, சாக்குப்பையில் எடுத்துச் சென்றனர்.