விதிமீறும் கனரக வாகனங்கள் கண்டுகொள்ளாத போலீசார்

ஆவடி, சென்னை – திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, ஆவடி காமராஜர் சிலை அருகே, ‘செக் போஸ்ட்’ சந்திப்பு உள்ளது. இது, பிரதான சாலை என்பதால், இரவு 12:00 மணி வரை போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், இவ்வழியாக செல்லும் வணிக வாகனங்களுக்கு, வரி வசூலிக்கும் பொருட்டு, ‘செக் போஸ்ட்’ எனப்படும் வாகன தணிக்கை மையம் அமைக்கப்பட்டது.

திருத்தணி, திருவள்ளூர், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சென்னை செல்லும் வாகனங்கள், இங்கு தணிக்கை செய்த பின் சென்று வந்தன. அதனால், தவறான நடவடிக்கைகள் தடுக்கப்பட்டன.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், இங்கு சிக்னல் அமைத்து, வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை. மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, கனரக வாகனங்கள் சென்று வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் செல்லும் நேரம் குறித்து, சி.டி.எச்., சாலை, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலை உட்பட, பல சந்திப்புகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சில மாதங்களாக, ஆவடி போக்குவரத்து போலீசார், விதிகளை மீறும் கனரக வாகனங்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

இதனால், ‘பீக் ஹவர்’ நேரங்களில் கூட, கனரக வாகனங்கள் சென்று வருவதை தினமும் பார்க்க முடிகிறது.

கனரக வாகனங்கள் அனைத்தும், ஆவடி ‘செக் போஸ்ட்’, பருத்திப்பட்டு, நசரத்பேட்டை, நெமிலிச்சேரி உள்ளிட்ட ‘செக் போஸ்ட்’டுகளை கடந்து தான், தினமும் சென்று வருகின்றன.

இருப்பினும், செக் போஸ்ட்டில் பணிபுரியும் போக்குவரத்து போலீசார், அவற்றை கண்டும் காணாமல் உள்ளனர்.

இதனால், கனரக வாகனங்களின் விதிமீறல்கள் நாளுக்கு அதிகரித்து வருவதோடு, போக்குவரத்து நெரிசலில் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், வாகன தணிக்கையை முறைப்படுத்தி, விதிமீறலில் ஈடுபடும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *