தானியங்கி தடுப்பு பணிகள் சுரங்கப் பாதைகளில் துவக்கம்
சென்னை, சென்னையில் மழை காலங்களில், தாழ்வான பகுதிகள், சாலைகள், சுரங்கப்பாதைகளில், மழைநீர் தேக்கம் அதிகமாக உள்ளது.
சாலைகளை காட்டிலும், சுரங்கப்பாதைளில் மழைநீர் அதிக அளவில் தேங்குவதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள், சில நேரங்களில் ஆழம் தெரியாமல், நீரில் சிக்கிக்கொள்கின்றன.
குறிப்பாக, மாநகர பேருந்துகள், கனரக வாகனங்கள் சுரங்கப்பாதை நீரில் சிக்கி, பழுதாகி நின்று விடுகின்றன. இதனால் மழைநீர் வடியும் வரை, அந்த சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது.
இதற்காக, சுரங்கப்பாதையில், ‘சிசிடிவி கேமரா’ பொருத்தப்பட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, மழைக்காலங்களில் கண்காணிக்கப்படுகிறது.
தொடர்ந்து, சென்னையில் உள்ள, 12 ஒற்றை வழி, 5 இரட்டை வழி சுரங்கப்பாதைகளில், தானியங்கி சாலை தடுப்புகளை அமைக்க, 98.99 லட்சம் ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியது.
அதன்படி, கோடம்பாக்கம் சுரங்கப்பாதையில், தானியங்கி தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. மற்ற சுரங்கப்பாதையிலும் தானியங்கி தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் உள்ள, 22 சுரங்கப்பாதைகளில், மழைநீர் அளவு உயரும்போது, தானாக கண்டறிய சுரங்கப்பாதை அணுகல் கட்டுப்பாட்டு அமைப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இவை, மழைநீர் குறிப்பிட்ட அளவு உயரும்போது, அந்த சுரங்கப்பாதை வழியே வாகன போக்குவரத்தை தடுக்க, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் தானியங்கி, தடுப்பை ஏற்படுத்தும். வெள்ள நீர் வடிந்தவுடன், தடுப்புகள் தானாக அகன்றுவிடும்.
மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் செயலியில், அவசர நிலைகளின் போது, அதிகாரிகள் நேரடியாக தடுப்புகளை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.