ஒரே நாள் இரவில் போலீசார் அதிரடி பைக் சாகசத்தில் ஈடுபட்ட 47 வாகனங்கள்… பறிமுதல்
சென்னை மாநகர் முழுதும், நேற்று முன்தினம் நள்ளிரவு பைக் சாகசத்தில் ஈடுபட்ட 47 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ‘சிசிடிவி’ கேமரா பதிவுகளை வைத்து நடவடிக்கையில் இறங்கிய போலீசார், சாகசத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, சென்னையின் பல சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
மாலை முதல் நள்ளிரவு வரை, சர்ச்சுக்கு பலரும் செல்வர் என்பதால், பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
அண்ணா சாலை, அடையாறு, சின்னமலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க, 2,000 பேர், வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதிவேகமாக பைக் ஓட்டி, வாகன ஓட்டிகளுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் ‘பைக் ரேஸ்’ ரோமியோக்கள் சென்றது தெரிந்தது.
இதையடுத்து போலீசார், ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து, பைக் ரேஸ்சில் ஈடுபட்டோரை பிடித்தனர்.
அபராதம்
அண்ணா சாலையில் ஏழு இடங்கள், காமராஜர் சாலையில் நான்கு இடங்கள், ஈ.வி.ஆர்., சாலையில் ஐந்து இடங்கள் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நான்கு இடங்களில் அதிவேகமாக சென்ற 47 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிக இன்ஜின் திறனுடைய ராயல் என்பீல்ட், ஆர்.எக்ஸ்., 100, கே.டி.எம்., உள்ளிட்ட உயர் ரக பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார், அதை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும், கண்காணிப்பு கேமராவில் சிக்கி கொள்ளக்கூடாது என்பதற்காக, நம்பர் பிளேட்டை கழற்றி வைத்து வந்துள்ளனர். நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக, தலா 1,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
சென்னனை மாநகர போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
சாலைகளில் உள்ள, நவீன கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், பைக் சாகசத்தில் ஈடுபட்டோரை பிடித்துள்ளோம்.
‘இனி நாங்கள் பைக்ரேசில் ஈடுபடமாட்டோம்’ என, இதுவரை 110 பேர் உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர்
தற்காலிகமாக, சென்னை மாநகரம் முழுதும், 165 இடங்களில் வாகன சோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பைக் ரேசில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிந்தால், பொதுமக்கள், சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறைக்கு, 90031 30103 என்ற மொபைல் போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
பைக் ரேஸ் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பைக் ரேசில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை நேரில் அழைத்து, வல்லுனர்கள் வாயிலாக கவுன்சிலிங் தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ஆங்கில புத்தாண்டு பிறக்கவுள்ளது. அன்று நள்ளிரவிலும், இதுபோன்ற பைக் சாகசத்தில் அதிகமானோர் பங்கேற்பர்.
சென்னை அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, இ.சி.ஆர்., மற்றும் சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட சாலைகளில் பைக் சாகசத்தில் ஈடுபடுவோரை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அதற்காக, அதிவேக பந்தயத்தில் பங்கேற்பதற்கு ஏற்ப இருசக்கர வாகனங்களை வடிவமைக்கும் மெக்கானிக் கடைகளில் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
பைக் சாகச குற்றத்திற்கு உடந்தையாக இருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர்களை எச்சரித்து வருகின்றனர்.
தவிர, சாகசத்தில் ஈடுபடுவோர் குறித்து விசாரித்து, அவர்களின் வீடுகளுக்கு சென்று, ‘நான் பைக் சாகசத்தில் ஈடுபட மாட்டேன். மீறினால், என் வாகனத்தையும், ஓட்டுனர் உரிமத்தையும் பறிமுதல் செய்து கொள்ளலாம்’ என, எழுதி வாங்கி வருகின்றனர்.
மேலும், பைக் சாகசத்தில் ஈடுபடுவோர் குறித்து, நுண்ணறிவு போலீசார் வாயிலாகவும் தகவல் திரட்டும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
– நமது நிருபர் குழு –