பாலத்தில் விரிசல்களால் பல்லாவரம் – ரேடியல் சாலை தடுமாறும் வாகன ஓட்டிகள்
பல்லாவரம், பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலத்தின் மேற்பகுதி சீர்குலைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நாள்தோறும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
பல்லாவரத்தில், ரயில்வே லைனை கடந்து, ஜி.எஸ்.டி., – ரேடியல் சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
முக்கியமான இம்மேம்பாலத்தை, நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன.
ரேடியல் சாலை வழியாக, ஓ.எம்.ஆர்., – கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள், ஐ.டி., நிறுவனங்களுக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், இம்மேம்பாலம் வழியாகவே சென்று வருகின்றன.
அதிக போக்குவரத்து கொண்ட ஒரு மேம்பாலத்தை, நெடுஞ்சாலைத் துறை முறையாக பராமரிக்கவில்லை.
இதனால், மேம்பாலத்தின் மேற்பகுதி, இறங்கும், ஏறும் பாதைகள் சேதமடைந்து, சிறு சிறு பள்ளங்களாக மாறிவிட்டன.
மேற்பகுதி ரவுண்டானாவில் விரிசல் ஏற்பட்டு, தொடர்ச்சியாக பள்ளங்கள் உள்ளன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள், பள்ளங்களில் தடுமாறி செல்கின்றன. சில நேரங்களில், விபத்தும் ஏற்படுகிறது. இப்படியே போனால், மேற்பகுதி
முழுதும் சீர்குலைந்து, மேம்பாலம் மேலும் பலவீனமடைய வாய்ப்பு உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இம்மேம்பாலத்தை நேரில் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என,வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.