‘கிரிண்டர்’ செயலியில் பழகி நாசமாகும் இளைஞர்கள் பணத்தையும் இழக்கும் அபாயம்
சென்னை புறநகரில், ‘கிரிண்டர்’ செயலி வாயிலாக, ஆண் நண்பர்களுடன் பழகி, அவர்களை வீட்டிற்கு வரவைத்து, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதும், போதைக்கு அடிமையாகி, பணம், நகைகளை இழக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில், இந்த செயலியை பயன்படுத்தி, கஞ்சா மற்றும் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது.
குரோம்பேட்டை, சந்திரன் நகரில், 30 வயதுடைய டாக்டர் ஒருவர், ‘கிரிண்டர்’ செயலி வழியாக, ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு, அவர்களிடம் போதை பொருட்களை வாங்கி, பயன்படுத்தி வந்துள்ளார்.
கடந்த 8ம் தேதி, டாக்டரை நேரில் சந்திக்க வந்த ஆண் நண்பர், நண்பருடன் சேர்ந்து, போதை தடுப்பு சிறப்பு காவலர்கள் எனக்கூறி, 30,000 ரூபாயை பறித்து சென்றார்.
தஞ்சாவூர், திருவிடைமருதுாரை சேர்ந்த ராஜசேகர், 29. இவர், ‘கிரிண்டர்’ செயலி வாயிலாக ஆண் நண்பர்களுடன் பழகி வந்துள்ளார்.
அதில் பழக்கமான நாமக்கல், குமாரபாளையத்தை சேர்ந்த மூர்த்தி, 34, என்பவர் வாயிலாக, மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளை பயன்படுத்தி வந்துள்ளார்.
கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு, நெல்லிக்குப்பம் ஜூப்ளி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இவரையும், சில நாட்களுக்கு முன், தாம்பரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 2.87 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம், இந்த செயலி வாயிலாக மெத் ஆம்பெட்டமைன் விற்பனை செய்ய முயன்ற, கேரள மாநிலத்தை சேர்ந்த சனோஜ் அப்பிச்சிர வளப்பில், 40, ரஹீஸ், 27, சுபின் ஷா, 26, அப்துல் ஷெரீப், 36, ஆகிய நான்கு பேரை, தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 61.4 கிராம் மெத் ஆம்பெட்டமைன், கார், ஏழு மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த செயலி வாயிலாக, தாம்பரம், சங்கர் நகர், சிட்லப்பாக்கம் காவல் நிலைய பகுதிகளில், ஏகப்பட்ட இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக, போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது
வெளியில் தெரிந்தால், குடும்பத்தினர் மத்தியில் தனக்கு கெட்ட பெயர் ஏற்படும் எனக் கருதி, பாதிக்கப்படுவோர் பலர் புகார் அளிக்க முன்வருவதில்லை.
எனவே, இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும், இதுபோன்ற செயலிக்கு தடை விதிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு, புறநகர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.