எம்.ஜி.ஆர். , நகரில் விபத்து அபாயம் தொடர்ந்து ஏற்படும் திடீர் பள்ளங்கள்

எம்.ஜி.ஆர்., நகர், கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர்., நகரில், அண்ணா பிரதான சாலை உள்ளது. இச்சாலை மட்டத்தில் இருந்து, 20 அடி ஆழத்தில், நெசப்பாக்கம்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும்,750 மி.மீ., விட்டம் உடைய கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

இக்கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மண் சரிந்து, அண்ணா பிரதான சாலையில், சில ஆண்டுகளாக அடிக்கடி மெகா பள்ளங்கள் ஏற்பட்டு வந்தன.

இதுகுறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவும், கழிவு நீர் குழாயின் அழுத்தத்தை குறைக்கவும், 2.20 கோடி ரூபாய் மதிப்பில், மாற்று பாதையில் இன்னொரு கழிவுநீர் குழாய் அமைக்கப்பட்டது.

ஆனால், கடந்த 2023, நவம்பரில், அண்ணா பிரதான சாலை – எம்.ஜி.ஆர்., நகர் சந்தை சந்திப்பில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, மீண்டும் பள்ளம் ஏற்பட்டது.

இதையடுத்து, 7 மாதங்களுக்கு பின், 2024 மே மாதம், அப்பள்ளம் சீர் செய்யப்பட்டு, தார் சாலை போடப்பட்டது.

இந்நிலையில், அதே பகுதியில், சில வாரங்களுக்கு முன் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு, சீர் செய்யப்பட்டது.

தற்போது, அண்ணா பிரதான சாலையில், நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரே, 5 அடி ஆழம், 4 அடி அகலத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதே இடத்தில், கடந்த 2021, நவ., 3ல், பள்ளம் ஏற்பட்டது.

அதேபோல், இப்பள்ளத்தில் இருந்து 50 மீட்டர் துாரத்தில் சாலை உள்வாங்கியுள்ளது. அப்பகுதியில் எந்நேரமும் பள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், போக்குவரத்து போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர்.

பள்ளத்தை சீர் செய்யும் பணிகள் நடப்பதால், அண்ணா பிரதான சாலையின் ஒரு பகுதியில், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *