மெல்லிசை ‘ பாடல் வித்தகர் ரபி நினைவுகளை மீட்டெடுத்த கச்சேரி
ஹிந்தி திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் பாடகர் முகமதுரபி. 1970களின் முற்பகுதியில் இருந்து 40 ஆண்டுகால வாழ்க்கையில், 26,000 திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். மெல்லிசை பாடல்களில் வித்தகராகவும் திகழ்ந்தவர்.
இவரது 100வது ஆண்டை கொண்டாடும் விதமாக, ‘பாரத் கலாச்சார்’ சென்னை, தி.நகரில் உள்ள ஒய்.ஜி.பி., அரங்கில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இதில், முகமது ரபியின் புகழ்பெற்ற பாடல்கள் பாடப்பட்டன.
‘சோட்டா ரபி’ எனும் கேரளாவைச் சேர்ந்த சவுரவ் கிஷன், 27, பங்கேற்று பாடினார். ‘ரபி’யின் பாடல்களை இவர் பாடும்போது, ‘ரபி’ இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எனும் பிரமிப்பு ஏற்பட்டது.
சவுரவ் கிஷனுடன், பின்னணிப் பாடகி ஜெயலட்சுமி ராஜகோபாலன் கூட்டணியில், ‘ரபி 100’ நிகழ்ச்சியில் பாடும் பாடல்களை கேட்பதற்கு, நுாற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். பாடகர்கள் வாவ் கார்த்திக், அனுஷா, பாலா உள்ளிட்டோரும் பங்கேற்று பாடினர்.
இப்படி ஒரு காம்போவில், ரபியின் பாடல்களை கேட்பதற்கு, நாங்கள் பாக்கியசாலிகள் என, அங்கு வந்திருந்த பெரியவர் ஒருவர் சிலாகித்து கொண்டது காதில் விழுந்தது. அவரது நினைவலைகளில் அனைவரும் மூழ்கியிருந்தனர்.
தோஸ்தி எனும் திரைப்படத்தில் வரும், ‘சஹூங்கா மெயின் துஜே’ பாடலை பாடகர்கள் பாடியபோது, அதிகாலை கடற்கரை காற்று மெல்லத் தொடுவது போன்ற மென் உணர்வை தந்தது.
இதை, அரங்கில் அவருக்கு கிடைத்த உணர்ச்சிகர கைதட்டல்களே வெளிப்படுத்தின.
அதேபோல், சூரஜ் திரைப்படத்தில் வரும், ‘பஹரோ பூல் பர்சாவோ’ பாடலை, ஒய்.ஜி.மகேந்திரன் பேரனும், நடிகை மதுவந்தியின் மகனுமான ரித்விக், அட்டகாசமாக பாடினார்.
அப்போது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஒய்.ஜி.மகேந்திரன், திடீரென்று இப்பாடலுக்கு ‘தபேலா’ வாசிக்க துவங்கி விட்டார்.
இது, அரங்கில் திரண்டுஇருந்த ரசிகர்களுக்கு, இதயம் உருக பாடும் குரலை ரசிப்பதா, தனித்துவமான தபேலா வாசிப்பை ரசிப்பதா என்பது போல், கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
– நமது நிருபர் –