திருமண தளம் வாயிலாக பழகிய பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

குமரன் நகர், மணலியை சேர்ந்தவர், 24 வயது பெண். இவர், திருமணத்திற்காக தமிழ் திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார்.

இதை கண்டு, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பூர்ணநாதன், 28, என்பவர், கடந்த 18ம் தேதி, இளம்பெண்ணின் உறவினர்களுடன் மொபைல் போனில் பேசினார்.

அப்பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்த நிலையில், இளம்பெண்ணுடன் அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்தார்.

இந்நிலையில், காலையில் சூரிய உதயத்தின் போது பார்க்க வேண்டும் என, ஆசை வார்த்தை கூறி, அப்பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்தார்.

இதையடுத்து, கடந்த 22ம் தேதி, மேற்கு மாம்பலம் தெற்கு கவரை தெருவில் உள்ள பூர்ணநாதன் வீட்டிற்கு, அப்பெண் சென்றார். இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், பூர்ணநாதன் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார்.

அவரை அப்பெண் தடுக்கவே, கழுத்தில் இருந்த 10 கிராம் தங்க செயினை கேட்டுள்ளார். அதை கொடுக்க மறுத்ததால், அவரது கன்னத்தில் அறைந்து, செயினை பறித்தார்.

பின், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என, மிரட்டி அனுப்பி வைத்தார். இதுகுறித்த புகாரையடுத்து, குமரன் நகர் போலீசார்,

வேலுார் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த பூர்ணநாதனை நேற்று கைது செய்தனர்.

அவர், மேற்கு மாம்பலத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து, 10 கிராம் தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *