ஏர்போர்ட்டுக்கு குண்டு மிரட்டல் விடுத்த முதியவர்
சென்னை, சென்னையில் உள்ள மாநில காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று மாலை 4:30 மணிக்கு, அழைப்பு ஒன்று வந்தது.
அதில் பேசிய மர்ம நபர், ‘சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது; அவை வெடிக்கும்’ என குறிப்பிட்டு, அழைப்பை துண்டித்தார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவினர், மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர்.
ஆனால், வெடிகுண்டு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதே போல், திருச்சி விமான நிலையத்திலும் சோதனை நடத்தப்பட்டு, மிரட்டல் புரளி என தெரியவந்தது. விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், தஞ்சாவூரை சேர்ந்த, 80 வயது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கு, 1 கோடி ரூபாய் வரை தண்டனை என, சட்ட விதிகளை மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.