பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மீண்டும் பால்கனி இடிந்து ஒருவர் படுகாயம்: போலீசார் விசாரணை
சென்னை: பட்டினப்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் மீண்டும் பால்கனி இடிந்து ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு வாழ்வதற்கு தகுதியற்றது என்று குடிசைமாற்று வாரியம் சார்பில் கடந்த ஆண்டே அனைவரையும் மாற்று இடம் வழங்கி காலிசெய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் குடியிருப்புவாசிகள் பலர் இன்னும் வீட்டை காலி செய்யாமல் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிசைமாற்று வாரியத்தின் 29வது பிளாக்கில் உள்ள 3வது மாடியின் பால்கனி திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது இடிந்து விழுந்த பால்கனியில் நின்று இருந்த தனியார் நிறுவன ஊழியர் மோகன் (48), கட்டிட இடிபாடுகளில் சிக்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் மோகனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் சேதமடைந்த குடியிருப்பை காலி செய்யும்படி குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 4ம் தேதி இரவு இதே குடியிருப்பின் சிலாப் ஒன்று இடிந்து நடந்து சென்ற எலக்ட்ரீஷியன் குலாம் மீது விழுந்து. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.