மரத்தில் கார் மோதி சமையல்காரர் பலி 5 பேர் படுகாயம்
சென்னை: சாலையோரத்தில் நின்ற மரத்தில் கார் மோதியதில் சமையல் தொழிலாளி பலியானார். 5 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம் (65), சமையல்காரர். இவர், ராமநாதபுரத்தில் பிரியாணி ஆர்டர் இருந்ததால், அதற்காக சென்னையில் இருந்து கார் மூலமாக சக பணியாளர்கள் அப்துல்பாஷா (29), குமார் (31), சாஹிஷா (35), ரபிக் (34) அகமது பாஷா (30) ஆகிய 5 பேருடன் ராமநாதபுரத்திற்கு சென்றுள்ளார். காரை அப்துல் கரீம் ஓட்டிச் சென்ற நிலையில் மற்ற 5 பேரும் காரில் பயணித்துள்ளனர்.
இவர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கன்னிகாபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் நின்ற மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அப்துல் கரீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மயிலம் போலீசார், விபத்தில் பலியான அப்துல் கரீமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.