வீட்டில் நிறுத்திய பைக் திருட்டு ஒருவர் கைது
அமைந்தகரை:அமைந்தகரை வடக்கு அரசமரம் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 34; கேபிள் ‘டிவி’ ஆப்பரேட்டர். இவர், கடந்த 16ம் தேதி, தனது பல்சர் பைக்கை, அதே தெருவில் உள்ள உறவினர் வீட்டு முன் நிறுத்தினார்.
பின், மறுநாள் காலையில் பார்த்த போது, பைக் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, அமைந்தகரை போலீசார் விசாரித்தனர்.
சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின்படி, பைக் திருட்டில் ஈடுபட்ட சென்ட்ரல் ரயல் நிலையம் நடைபாதையில் வசிக்கும் அஜித், 22, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், அஜித் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, பைக்கை திருடியது தெரியவந்தது. இவர் மீது, திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையத்தில், ஒரு திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது.
அவரிடம் இருந்து பைக்கை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.