துண்டிக்கப்பட்ட மணிக்கட்டை இணைத்து ஜி.எச்., சாதனை
சென்னை:சென்னை, கண்ணகி நகரில் வசிக்கும், 23 வயது மகன், தன் தந்தை இறப்பிற்கு, தன் காதலனுடன் சென்றது தான் காரணம் என நினைத்து, பெரும்பாக்கத்தில் வசித்த, தன் 40 வயதான தாயை, கத்தியால் இரு கைகளிலும் நேற்று முன்தினம் வெட்டினார்.
சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை 2:20 மணிக்கு, மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்குள்ள டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்ததில், இடது கை மணிக்கட்டு முழுதும் வெட்டப்பட்டு, பெரும்பாலான தசைநார்கள், இரண்டு பெரிய நரம்புகள், ஒரு பெரிய ரத்தநாளம் துண்டிக்கப்பட்டு, ஒரு திசுவால் மட்டும் கை தாங்கிப்பிடிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவும், உச்சந்தலை, முதுகெலும்பு பகுதிகளிலும், ஆழமான காயங்கள் இருந்தன.
இதையடுத்து, காலை 6:00 மணிக்கு, டாக்டர்கள் சுகுமார், ரஷீதா, சுஜா தலைமையில், மூத்த டாக்டர்கள் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். எட்டு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின், வெட்டப்பட்ட கை மணிக்கட்டை வெற்றிகரமாக இணைத்தனர்.
தொடர்ந்து, மற்ற வெட்டுக்காயங்களுக்கு தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி, கண்காணித்து வருகின்றனர்
இதுகுறித்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறுகையில், ”இந்த மருத்துவமனையில், பல சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருந்தாலும், எட்டு மணி நேரம் போராடி, மணிக்கட்டுகளை இணைத்தது, ஒரு சாதனை முயற்சி. இதற்கு, தனியார் மருத்துவமனையில், 10 லட்சம் ரூபாய் வரை செலவாகி இருக்கும்,” என்றார்.