எம்.சி., ரோட்டில் ஒரு வழி பாதையாக மாற்றக் கோரிக்கை போக்குவரத்து ஸ்தம்பிப்பு
வண்ணாரப்பேட்டை:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், சென்னையின் முக்கிய வர்த்தக தலமாக விளங்கும் வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோடில், 16 கோடி ரூபாய் மதிப்பீடில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோடு, வீராஸ் கலெக் ஷன் வணிக மையம் துவங்கி ஜி.ஏ.ரோடு, முத்துமாரியம்மன் கோவில் வரை, நடைபாதை வளாக பணி நடந்து வருகிறது.
சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகத்தில் மழைநீர் வடிகால், மின்சாரம், தொலைபேசி கட்டமைப்பு, குடிநீர், கழிவுநீர் குழாய்கள் ஆகிய அனைத்தும் செல்லும் வகையில், முழுமையான சாலையாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை காலம் என்பதால், தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் துணிகளை வாங்க, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.
அதேநேரம், ஸ்மார்ட் சிட்டி பணிகளும் நடந்து வருவதால் எம்.சி.ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களுக்கு பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
”பொங்கல் பண்டிகை வரை, எம்.சி.ரோட்டை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்ட வேலையை பொங்கல் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என, வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.