மின் வாரிய அலட்சியத்தால் உயிர் பலி அபாயம்
பெரம்பூர்:திரு.வி.க., நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர், மேட்டுப்பாளையம் அருந்ததி நகரில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். போலேரி அம்மன் தெரு உட்பட 16 தெருக்களை கொண்ட இப்பகுதியில், மின்வாரிய பணிகள் படுமோசமாக உள்ளன.
இங்குள்ள மின் பகிர்மானப் பெட்டிகளில் இருந்து, கண்டமேனிக்கு மின் ஒயர்கள் மூலம் மின் இணைப்புகள் குடியிருப்புகளுக்கு செல்கின்றன. திறந்து கிடக்கும் மின் பெட்டியில், ‘யார் வேண்டுமானாலும் மின் இணைப்பு எடுத்துக் கொள்ளலாம்’ என்ற அளவிலேயே பராமரிப்பு உள்ளது. உயர் மின் அழுத்தம் கொண்ட மின்சார ஒயர்கள் மின் பகிர்மானப் பெட்டிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன.
இதனால், மழை நேரத்தில் உயிர் பலி ஏற்படும் ஆபத்து உள்ளது. கடந்த மாதம், ஆட்டுக்குட்டி ஒன்று மின்சாரம் தாக்கி இறந்தது.
பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்களுக்கான மின்வாரிய பணிகளை கவனிக்க வேண்டிய அதிகாரிகளிடம் புகார் அளித்தால், அவர்கள் கேட்பதே இல்லை. கடந்த மழைக்கு கூட வீடுகளில் விளக்கு, ‘டிவி’ உள்ளிட்டவை, உயர் மின்னழுத்தத்தால் சேதமடைந்தனர். இங்கு போர்க்கால அடிப்படையில் மின்வாரியப் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே, உயிர் இழப்பில் இருந்து நாங்கள் தப்பிக்க முடியும்’ என்றனர்.