ஆலந்துாரில் ரயில்வே நடை மேம்பால பணி ஓராண்டாகியும் துவக்கப்படாத அவலம்
சென்னை, மவுன்ட் – -கிண்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், ஆலந்துார் – -ஆதம்பாக்கம் இடையே, எல்.சி., 15 எனும் ரயில்வே கேட் இருந்தது.
இந்த ரயில்வே கேட்டின் இருபுறமும் பள்ளிகள் அதிகம். ஆலந்துாரில் வர்த்தக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இதனால், குறிப்பிட்ட ரயில்வே கேட்டை, நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வந்தனர்.
சென்னை புறநகர் பகுதிவாசிகள் போக்குவரத்திற்காக, எழும்பூர் – -தாம்பரம்- – செங்கல்பட்டு மார்க்கத்தில், அதிக அளவு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.
அவசர கதியில் மக்கள் ரயில்வே கேட்டை கடப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை, புறநகரில் உள்ள ரயில்வே கேட்கள் அகற்றப்பட்டன.
ஆலந்துார் நிதிப் பள்ளி அருகில் இருந்த, எல்.சி-., 15 ரயில்வே கேட், 2002ம் ஆண்டு மூடப்பட்டது. இருப்பினும், அந்த வழித்தடத்தையே ஆபத்தான முறையில் கடந்ததால், ரயில் மோதி, பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பலியாகினர்.
அதனால், மூடப்பட்ட எல்.சி.,- 15 கேட் இருந்த பகுதியில் சுரங்கப்பாலம் அமைக்க வலியுறுத்தி, ஆயிரக்கணக்கானோர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். சென்னை மாநகராட்சி கூட்டத்தில், 2011ல், 5 கோடி ரூபாயில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
ரயில்வே பங்காக, 2.91 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. சுரங்கப்பாதை திட்டத்திற்கான ஒப்பந்தம் விடப்பட்டு, 2013ல் பூமி பூஜையும் போடப்பட்டது. அத்திட்டம், நடைமுறை சிக்கல்களால் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, நடைமேம்பாலம் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அத்திட்டமும் கிடப்பில் போட்பட்டது.
தி.மு.க., ஆட்சி வந்த பின், மீண்டும், 2.71 கோடி ரூபாய் மதிப்பில் நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்து, ஒரு கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி கோரப்பட்டது.
அதற்கான ஒப்புதல் அளித்து ஓராண்டிற்கு மேல் ஆகியும், நடைமேம்பால பணி துவக்கப்படவில்லை.
சில மாதங்களுக்கு முன், தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான அன்பரசன் தலைமையில், ஆலந்துார் தொகுதி பணிகள் குறித்து, மாநகராட்சி உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது.
ஆனால், இதுவரை பணிகள் துவக்கப்படவில்லை. எனவே, நடைமேம்பாலப் பணியை விரைவில் துவக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.