பைக்கில் சென்ற 2 வாலிபர்கள் பலி; ஒருவரின் தலை துண்டான கோரம்
சென்னை : சென்னை பள்ளிக்கரணையில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில், ஐ.டி., நிறுவன ஊழியர்களான இரு வாலிபர்கள் உயிரிழந்தனர். இதில், ஒருவரது தலை துண்டாகி விழுந்தது.
கேரளாவைச் சேர்ந்தவர் விஷ்ணு, 24. சென்னை மேற்கு மாம்பலம், நாகலட்சுமி தெருவில் வசித்து வந்தார். இவரது நண்பர் கோகுல், 24; பம்மல், சங்கர் நகர் பிரதான சாலை, செல்வ விநாயகர் கோவில் தெருவில் வசித்தார்.
இருவரும் பெருங்குடியில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுடன் பணியாற்றும் அஜேஷ், தன் வேலையை ராஜினாமா செய்து, சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு செல்கிறார்.
இதனால், அவரை பார்ப்பதற்காக பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகரில் உள்ள அஜேஷ் அறைக்கு, நேற்று முன்தினம் இரவு விஷ்ணு, கோகுல் மற்றும் நண்பர்கள் நான்கு பேர் வந்து தங்கி, மது அருந்தியுள்ளனர்.
மதுவின் போதை குறைந்தபோது, அதிகாலை 4:00 மணிக்கு விஷ்ணு, கோகுல் இருவரும், 300 சி.சி., திறன் உடைய கே.டி.எம்., பைக்கில் கள்ளச் சந்தையில் மது வாங்குவதற்காக, ரேடியல் சாலையில் உள்ள ‘ஜோலி பே பார்’ கடைக்கு சென்றுள்ளனர்; விஷ்ணு டூ – வீலரை ஓட்டியுள்ளார்.
பின், தேவையான மது வகைகளை வாங்கி திரும்பிய போது, பள்ளிக்கரணை சிவன் கோவில் அருகே கட்டுப்பாட்டை இழந்த டூ – வீலர், சாலை மையத்தடுப்பில் மோதியது.
இதில், பின்னால் அமர்ந்திருந்த கோகுல், 20 அடி துாரம் துாக்கி வீசப்பட்டு, மின் கம்பத்தில் மோதினார். அவரது தலை துண்டாகி தனியே விழுந்தது. விஷ்ணுவிற்கு நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார்.
சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், இருவர் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.