மாநகராட்சியிடம் அறிக்கை கேட்கும் தீர்ப்பாயம் : அடுக்குமாடி குடியிருப்பு, ஹோட்டல்கள் குப்பையை எவ்வாறு அகற்றுகின்றன?
சென்னை, சென்னையில் பெரிய அளவில் செயல்படும் ஹோட்டல்கள், விழா அரங்குகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களில் உருவாகும் குப்பை கழிவுகள், நீர்நிலைகள், சாலையோரங்களில் கொட்டுகின்றன. இது தொடர்பாக நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தாமாக வழக்கு பதிந்து விசாரித்து வரும் தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
அதிகளவில் குப்பையை உருவாக்கும் நிறுவனங்கள் தொடர்பாக, சென்னை மாநகராட்சியும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தாக்கல் செய்த அறிக்கை முழுமையானதாக இல்லை.
பெரிய நிறுவனங்கள் உருவாக்கும் குப்பையின் அளவு எவ்வளவு? அவற்றை எவ்வாறு அகற்றுகின்றனர்? கழிவுகளை சுத்திகரிக்கும் வசதிகள் எவ்வளவு உள்ளன?
குப்பையை அகற்றுவதில் விதிகளை மீறிய நிறுவனங்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சென்னை மாநகராட்சியும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.