கிருஷ்ணன் – விஜயலட்சுமியின் வயலின் இசையில் நிலவிய பக்தி
லால்குடி ஜெயராமன் இயற்றிய ஆதி தாளத்தில் அமைந்த கல்யாணி ராக வர்ணத்தை இசைத்தனர், பிரபல வயலின் கலைஞர்கள், சகோதர, சகோதரிகளான லால்குடி கிருஷ்ணன், விஜயலட்சுமி. தன் முதல் இசைப்பிலே, பெருங்கடலில் மூழ்கடிக்க, சிறு துளியை துாவிவிட்டனர்.
அடுத்து, தியாகராஜர் இயற்றிய கன்னட கௌளை ராகம், ரூபக தாளத்தில் அமைந்த ‘சொகுசு ஜூட தரமா’ எனும் கீர்த்தனையை இசைத்தனர். மனதிற்கு சுகமான கற்பனை ஸ்வரங்களை இதில் சேர்த்திருந்தனர். அடடா அட்டகாசம்.
அடுத்தபடியாக, அம்பாளை போற்றி, ‘ஷங்கரி ஷம்குரு சந்திரமுகி அகிலாண்டேஸ்வரி’ என்ற சாவேரி ராகம், ஆதி தாளம், திஸ்ர நடையில் அமைந்த கீர்த்தனையை இசைத்தனர்.
பின், பெருமாளை போற்றிப் புகழும் ‘ஸ்ரீனிவாச’ எனும் ஹம்ஸா நந்தி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை இசைத்தனர். கோவில் மூலஸ்தானத்தில் நிலவும் பக்தி அலைபோல், மனதினுள் அமைதியை கொண்டு வந்தது.
பின், கீரவாணி ராகத்தை ஆலாபனை செய்யத் துவங்கினர். நீண்ட நெடிய நேரம், தங்களுக்கே உரிய ‘லால்குடி பாணி’யில் இசைத்து, ராகத்தின் உச்சகட்ட ரசனையை கொண்டு வந்தனர்.
இந்த ராகத்தில், தியாகராஜர் இயற்றிய ஆதி தாளத்தில் அமைந்த ‘கலிகியுண்டே’ எனும் கீர்த்தனையை வாசித்தனர். இங்கு, இவர்கள் இசைத்த கற்பனை ஸ்வரங்கள், விறுவிறுப்பாகவும், வித்தியாசமாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்தது.
தொடர்ந்து, கோல்கட்டா அரவிந்த் ரங்கநாதன் மிருதங்கமும், கோபாலகிருஷ்ணன் கஞ்சிராவும், தனி ஆவர்த்தனத்தில் பாய்ச்சலை நிகழ்த்தினர்.
இருவரும் வாசித்த விதம், சபாவில் உள்ள அனைவரையும் அவ்வளவு உற்சாகப்படுத்தியது. கைகளில் தாளமிட்டு ரசித்துக் கொண்டிருந்ததை கண் கூட காண முடிந்தது.
நிறைவாக, தங்களது குரு பத்மஸ்ரீ லால்குடி ஜெயராமன் இயற்றிய காபி ராகம், ஆதிதாளம் திஸ்ர நடையில் அமைந்த தில்லானா மங்களம் இசைத்து கச்சேரியை நிறைவு செய்தனர்.
திருவான்மியூர், ஸ்ரீ சங்கர வித்யாஷ்ரம் அரங்கில் இவர்கள் கச்சேரியை கண்டுகளித்தோர், இவர்களைபோல் வேறு யாராலும் இப்படி கச்சிதமாக வாசிக்க முடியாது என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.
-சத்திரமனை ந.சரண்குமார்