வண்டலுார் மினி வேடந்தாங்கலுக்கு பறவைகள் வரத்து துவக்கம்
பார்வையாளர்களை அனுமதிக்க வலியுறுத்தல்
தாம்பரம்,’மினி வேடந்தாங்கல்’ என்ற சிறப்பு பெற்ற, வண்டலுார் உயிரியல் பூங்கா வளாகத்தில் உள்ள ஓட்டேரிக்கு, வழக்கம் போல் இந்த ஆண்டும் பறவைகள் வர துவங்கியுள்ளன. எனவே, அங்கு பறவைகளை கண்டு ரசிக்க, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வண்டலுார் உயிரியல் பூங்கா வளாகத்தின் ஒரு பகுதியில், ஓட்டேரி என்ற ஏரி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில், இந்த ஏரிக்கு வண்ண நாரை, நீர்க்காகம், பாம்புதாரா, அரிவாள் மூக்கன், சிறுகொக்கு, நத்தைகொத்தி, வக்கா, மாட்டுக்கொக்கு உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும்.
அதுபோன்ற நேரங்களில், இந்த ஏரி, ‘மினி வேடந்தாங்கல்’ போல் காட்சியளிக்கும். பார்வையாளர்கள் பறவைகளை கண்டு ரசிப்பதற்கு வசதியாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏரி துார்வாரி ஆழப்படுத்தப்பட்டது.
இருக்கையுடன் கூடிய நடைபாதை மற்றும் கரைகள் பலப்படுத்தப்பட்டன. பறவைகள் முட்டையிட்டு, குஞ்சு பொரிப்பதற்கு ஏதுவாக, ஏரியினுள் நீர்மத்தி மரங்கள் நடப்பட்டன.
இம்மரங்கள், வேடந்தாங்கலில் அதிக அளவில் காணப்படுகின்றன. தண்ணீரில் நன்கு வளரக்கூடியது. குடை போன்று இருப்பதால், பறவைகள் முட்டையிடுவதற்கும், குஞ்சு பொறிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். தண்ணீரில் இருப்பதால், மற்ற விலங்குகளிடம் இருந்து பறவை குஞ்சுகள் பாதுகாக்கப்படுகின்றன
பொதுவாக ஏரிக்கு வரும் ஒரு பறவை, எந்த இடத்தில் மீன்கள் அதிகமாக இருக்கின்றன என்பதை தேடும். பின், தன் இனத்தை அழைத்து வரும்.
தற்போது, பறவைகள் வரத்து துவங்கினாலும், குறைந்த எண்ணிக்கையிலேயே வந்துள்ளன. ஏரியினுள் உள்ள நீர்மத்தி மரங்களில், 200க்கும் மேற்பட்ட பறவைகளே உள்ளன.
மற்றொருபுறம், இந்த மினி வேடந்தாங்கலை கண்டு ரசிக்க, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஏரிக்கு செல்லக்கூடிய பாதை அடைக்கப்பட்டு உள்ளது.
இதனால், பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டாலும், ‘வாட்ச் டவர்’ரில் நின்று பறவைகளை கண்டு ரசிக்க முடியாத அளவிற்கு மரக்கிளைகள் மூடிவிட்டன.
நடைபாதை முழுதும், குப்பையால் மூடப்பட்டுள்ளது. அதனால், நடைபாதையை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து, பறவைகளை கண்டு ரசிக்க பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என, அர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது, குறைந்த அளவிலேயே பறவைகள் வந்துள்ளன. அடுத்த மாதம், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். ஏரியினுள் செய்யப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் உள்ளன. அவற்றையும் செய்து முடித்து, பறவைகளை கண்டு ரசிக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
– பூங்கா அதிகாரிகள்.