காஞ்சியில் நஷ்டமடைந்த சிப்காட் நிறுவனங்கள் : அரசு துறைகள் போல் தொழிற் சாலைகளிலும் மோசடி
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், ஒரடகம், பிள்ளைப்பாக்கம், வல்லம் வடகால் உள்ளிட்ட ஏழு சிப்காட் தொழிற்பூங்காக்கள் செயல்படுகின்றன.
இங்குள்ள ஏராளமான தொழிற்சாலைகளில், அவ்வப்போது ஆய்வு நடத்தப்படும். நிறுவன வங்கி கணக்குகளின் வரவு – செலவு, மூலப்பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்டவற்றின் மீது, அந்தந்த நிறுவன குழுவினர் தணிக்கை செய்வர்.
அந்த வகையில் ஐந்து ஆண்டுகளில் நடத்திய ஆய்வில், பல தொழிற்சாலைகளில் ஊழியர்கள் முறைகேடு, மோசடி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2023 நவம்பர் முதல் 2024 நவம்பர் வரையிலான ஒரே ஆண்டில், ஐந்து தொழிற்சாலைகளில், பல்வேறு வகையிலான மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. 5.2 கோடி ரூபாய்க்கான இந்த மோசடி சம்பவங்களால், தொழிற்சாலைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனியார் தொழிற்சாலைகளில் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு இது சிக்கலை ஏற்படுத்துகிறது.
இவற்றை தடுக்க, பண பரிமாற்றம் செய்யும்போது ஊழியர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளைவிட, கூட்டு முடிவுகளை எடுப்பதும், பாஸ்வேர்ட், ஓ.டி.பி., போன்ற பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தொழிற்சாலைகளின் நிதித்துறை ஊழியர்கள் மீது, நிர்வாகம் தனி கவனம் செலுத்துகிறது. அரசு துறைகளில், அரசின் திட்டங்களில் முறைகேடு, ஊழல் போன்ற பிரச்னை அதிகளவில் எழும் சூழலில், தனியார் தொழிற்சாலைகளிலும் நிதி மோசடி, ஊழல், திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால், தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு, பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
ஊழியர்களால் நடந்த மோசடி சம்பவங்கள்
1 உத்திரமேரூர் தாலுகா, காட்டுப்புதுார் கிராமம், ‘யங் பிராண்ட் அபாரல் லிட்.,’ என்ற நிறுவனத்தில் ஆவணங்களை மாற்றி, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துஉள்ளது. நிறுவனத்தின் மனிதவள மேலாளர் முகமதுஆரிஸ் அலி, நிதி அலுவலர் குருகிருஷ்ணன், சீனியர் மனிதவள மேலாளர் தமிழரசு ஆகியோர் மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது2 ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, வல்லம் வடகால் சிப்காட்டில் இயங்கும், ‘சத்யம் ஆட்டோ காம்பெனன்ட் பிரைவேட் லிட்’ நிறுவனத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் வாங்குவதில், நிறுவன நிர்வாகிகள் துணையோடு, 3.38 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரிந்துள்ளது. புகாரின்படி, ராஜேஷ்குமார், சந்தீப்குமார், கன்ஷியாம்கன்வர், நாககிஷோர், பாரத்சவுத்ரி, ராஜாராம்துபே ஆகிய 6 பேர் மீது, கடந்த நவம்பரில் வழக்கு பதியப்பட்டது3 பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் இயங்கும் ‘பர்ஸ்ட் சோலார் இண்டியா வென்ச்சூர்ஸ் பிரைவேட் லிட்’ நிறுவனத்தில், பூந்தமல்லியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு, தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை பயன்படுத்தி, 40 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக, நிறுவனம் சார்பில் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சதீஷ்குமார் மீது, கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது4உத்திரமேரூர் தாலுகா, மேல்பாக்கத்தில் செயல்படும், ‘நோபல்டெக்’ நிறுவனத்தில், நிதி துறையில் பணியாற்றும் சிவஸ்ரீராமலு, தமிழரசன் ஆகிய இருவரும், தொழிற்சாலை வங்கி கணக்கில் இருந்து பிற நிறுவனங்களுக்கு முறைகேடாக, லட்சக்கணக்கான ரூபாயை முறைகேடாக பரிவர்த்தனை செய்தது ஆய்வில் தெரியவந்தது. மேலும், பல வங்கி கணக்குகளுக்கு, 87.5 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை செய்ததால், நிறுவனம் அளித்த புகாரின்படி, இருவர் மீதும் 2023 டிசம்பரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.5 காஞ்சிபுரம் தாலுகா, நீர்வள்ளூர் கிராமத்தில், ‘எஸ்.எச்., எலக்ட்ரானிக்’ நிறுவனம் செயல்படுகிறது. இங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்படும் இரும்பு கழிவுகளை, நான்கு ஊழியர்கள் திருடியது தெரிந்தது. நிறுவனத்திற்கு வழக்கமாக வரும் லாரியை போலவே, பதிவெண்ணை மாற்றி, வேறு லாரியை எடுத்து வந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவுகளை திருடினர். இதுதொடர்பாக, தயாநிதி, சுந்தரமூர்த்தி, யுவராஜ், பார்த்திபன் ஆகிய நான்கு பேர் மீது, 2023 நவம்பரில் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.