பெருமாள் கோவில் நிலம் ஏலம் விவசாயிகள் எதிர்ப்பால் ஒத்திவைப்பு
திருநீர்மலை, பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, 156 ஏக்கர்நிலம், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளது.
இதில், 80 ஏக்கர் நிலத்தில், அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், விவசாய நிலங்களை குத்தகைக்கு ஏலம் விட, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, ரங்கநாத பெருமாள் கோவில் வளாகத்தில், ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று நடந்தன.
இதில், அப்பகுதியைசேர்ந்த விவசாயிகள், ஏலம் எடுப்போர் என, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஏலம் விடும் நேரத்தில், நான்கு தலைமுறைகளாக கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, எங்களது அனுமதி இல்லாமல் எப்படி ஏலம் விடலாம் எனக்கூறியும், விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றி, விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் திடீரென கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
சங்கர் நகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஏலம் விடுவது, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது