நுாதன திருட்டு 4 பேருக்கு போலீஸ் வலை
தாம்பரம்,மேற்கு தாம்பரம், கோவிந்தராஜ் தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் அழகுராஜா, 31. இவர், நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, ‘ஷட்டர்’ பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த, 12,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், நேற்று முன்தினம் இரவு கடை முன் வந்து உட்கார்ந்திருந்த நான்கு பேர், பேசி கொண்டிருப்பதை போல நடித்து, நுாதனமாக திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
ஷட்டர் பூட்டை உடைத்து கும்பலில், ஒருவர் மட்டும் உள்ளே புகுந்து திருடுவதும், மற்ற மூவர் ஷட்டரை பூட்டிவிட்டு, வெளியே உட்கார்ந்து பேசுவதுமாக நடித்து, யாராவது வருகின்றனரா என கண்காணிக்கின்றனர்.
உள்ளே சென்றவர் வெளியே வர, நான்கு பேரும் ஷட்டரை அடைத்துவிட்டு, ஒன்றும் நடக்காததுபோல் அங்கிருந்து தப்பினர்.
இந்த கண்காணிப்பு கேமரா வீடியோ பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நுாதனமாக மளிகை கடையில் திருடிய அந்த நான்கு பேரை, தாம்பரம் போலீசார் தேடி வருகின்றனர்.