ஆவடி கடைகளில் குட்கா ரெய்டு ரூ.2.75 லட்சம் அபராதம் விதிப்பு
ஆவடி, ஆவடியில் நேற்று நடந்த அதிரடி ரெய்டில் ௧௨ கடைகளிலிருந்து ௨ டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட அம்பத்துார், ஆவடி, பூந்தமல்லி, மாங்காடு, மணலி, மீஞ்சூர், உட்பட பல்வேறு பகுதிகளில் 75க்கும் மேற்பட்ட போலீசார், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மளிகை கடை, பெட்டி கடை, தேனீர் விடுதிகளில் சோதனை செய்தனர்.
இதில், 12 கடைகளில் இருந்து, 2,068 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகள் மீது வழக்கு பதிவு செய்து, 2.75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபட்டதாக, மாங்காடு பகுதியைச் சேர்ந்த ராஜன், 56, பூந்தமல்லியைச் சேர்ந்த காமாட்சி, 41, காட்டுப்பள்ளியைச் சேர்ந்த குணா, 50, மற்றும் திருப்பாலைவனத்தைச் சேர்ந்த பழனி, 57, என, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருட்களுக்கு எதிரான அதிரடி சோதனைகள், கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்