காரப்பாக்கம் வார்டு அலுவலகத்தில் வெள்ளம் புகுந்து ஆவணங்கள் நாசம்

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் உள்ள வார்டு அலுவலகம்த்தில், ஒவ்வொரு பருவமழைக்கும், வெள்ளம் கட்டடத்திற்குள் புகுந்து, மாநகராட்சிக்கு சொந்தமான பல பொருட்கள் நாசமாகின.

புதிய அலுவலகம் கட்ட, 1.35 கோடி ரூபாய் நிதியை, கடந்த ஆண்டு மாநகராட்சி ஒதுக்கியது. பொறியியல், வரி வசூல், சுகாதாரம், கவுன்சிலர் அலுவலகம் உள்ளிட்ட வசதியுடன், 5,600 சதுர அடி பரப்பில், கட்டுமான பணி மார்ச் மாதம் துவங்கியது.

பருவமழைக்குமுன், கட்டுமான பணியை முடிக்க, ஒப்பந்த நிறுவனத்திடம் அதிகாரிகள் வலியுறுத்தினர். தரை பலப்படுத்திய நிலையுடன், பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நடப்பு பருவமழைக்கும் வெள்ளம் புகுந்து, மாநகராட்சியின் பல ஆவணங்கள், பொருட்கள் சேதமடைந்தன. பணியை வேகமாக முடிக்க வேண்டும் என, மாநகராட்சி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கட்டுமான பணியை முடிக்காத நிறுவனத்திற்கு அபராதம் விதித்து, கறுப்பு பட்டியலில் சேர்க்க, கமிஷனரிடம் அறிக்கை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *