பல்லாங்குழியான கத்திவாக்கம் சாலை
திருவொற்றியூர்,பல்லாங்குழியான கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், பயணிக்க முடியாமல் தள்ளாடும் வாகனங்களால், விபத்து அச்சம் நிலவி வருகிறது.
எண்ணுாரின், கத்திவாக்கம் பஜாரில் இருந்து, வள்ளுவர் நகர் வரையிலான, கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர். தாழங்குப்பம், எண்ணுார் விரைவு சாலை, அத்திப்பட்டு இணைப்பு பாலம் செல்ல இவ்வழியே பிரதானம்.
வடசென்னை அனல்மின் நிலையங்கள் நோக்கி பைக்கில் செல்லும், ஊழியர்கள் அதிகம் பேர், இச்சாலைவழியாகவே சென்றாக வேண்டியுள்ளது.
இந்நிலையில், இந்த சாலையின், 200 அடி துாரத்திற்கு தார் சாலை பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் தள்ளாடியபடி செல்கின்றன.
பல்லாங்குழியான சாலையில் பயணிக்க முடியாமல், அவ்வப்போது வாகனங்கள் நிலைதடுமாறி விபத்தில் சிக்குவதுண்டு. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, தார் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.