திருமழிசை பேரூராட்சிக்கு ரூ. 52 லட்சம் அபராதம் விதிப்பு
சென்னை, ‘பூந்தமல்லியை அடுத்த வெள்ளவேடு ஊராட்சியில் பங்காரு கால்வாய் வழியே, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்த கால்வாயில் குப்பை, இறைச்சி கழிவு மட்டுமின்றி, ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பையும் கொட்டி எரிக்கப்படுகிறது.
இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, கால்வாயில் நீரோட்டமும் பாதிக்கப்பட்டது. இதனால், குப்பை கொட்டுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்’ என, திருவள்ளூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கை
திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016ன் படி, நீர்நிலைகள், கால்வாய்களில் கழிவுகளை கொட்டவோ, எரிக்கவோ கூடாது. வாரிய ஆய்வில், செம்பரம்பாக்கம் ஏரியை இணைக்கும் பங்காரு கால்வாயில், கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதும், எரிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.
இந்த கழிவுகளை அகற்றக்கோரி, திருமழிசை பேரூராட்சி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, பல முறை ‘நோட்டீஸ்’ அனுப்பியும் நடவடிக்கை இல்லை; பதிலும் தரவில்லை. எனவே, பொறுப்பற்ற வகையில் செயல்படும் திருமழிசை பேரூராட்சிக்கு, 52 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.