அமித்ஷாவை கண்டிப்பதாக கூறி மக்களின் பல மணி நேரம் வீணடிப்பு
அரசமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழா விவாதத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் குறித்து கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
நேற்று முன்தினத்தை தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும், சென்னை முழுதும், பல இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அந்த வகையில், சென்னை உயர் நீதிமன்றம் முன், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட வழக்கறிஞர் அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டு பதவி விலக கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலர் வீரபாண்டியன் தலைமையில், வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் கல்லுாரி எதிரில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆலந்துார் பகுதி தி.மு.க., சார்பில் பரங்கிமலை, சுரங்கப்பாதை – படவட்டம்மன் கோவில் அருகில், ஆலந்துார் வடக்கு பகுதி கழக செயலர் குணாளன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆலந்துார் தெற்கு பகுதி செயலரும், மண்டல குழு தலைவருமான சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்லாவரத்தில், 2வது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில், தமிழ்நாடு பாடநுால் கழக தலைவர் லியோனி, எம்.எல்.ஏ., கருணாநிதி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.
தாம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், எம்.எல்.ஏ., ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ்
போரூர் ரவுண்டானா அருகில், நேற்று மாலை, காங்., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச்செயலர் தளபதி பாஸ்கர் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை கண்டித்து கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
காங்., மூத்த தலைவர் தங்கபாலு பேசுகையில், ”ராகுல் பார்லிமென்டிற்கு செல்லவிடாமல், பா.ஜ., – எம்.பி.,க்கள் தடுக்கின்றனர். மல்லிகார்ஜுனகார்கே கீழே தள்ளப்பட்டுள்ளார். பார்லிமென்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
”பா.ஜ., அச்சுறுத்தலுக்கு, ராகுல் ஒரு போதும் அஞ்ச மாட்டார். நிச்சயம் இண்டியா கூட்டணி தொடர்ந்து வெற்றி பெறும்; ராகுல் பிரதமராவார். இதை யாராலும் தடுக்க முடியாது,” என்றார்.
வி.சி., கட்சியினர் நேற்று, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். அக்கட்சியின் பொதுச் செயலர் வன்னி அரசு தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தில் இறங்கி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்களின் சேவை, 15 நிமிடத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டிப்பதாக கூறி, ஆங்காங்கே நடத்திய போராட்டத்தால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கபப்ட்டனர். போராட்ட களத்தை கடந்துச் செல்ல, அவர்களுக்கு பல நிமிடங்கள் ஆனதால், அவதிப்பட்டனர்.
– நமது நிருபர் –