வசூலை தடுக்க மயான பூமிக்கு ஆன்லைன் முன்பதிவு முறை
சென்னை, சென்னை மாநகராட்சியின், 2024 -25ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்த ஆய்வு கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், தற்போது நடந்து வரும் பணிகளை, இந்த நிதியாண்டுக்குள் முடிக்க, மேயர் பிரியா உத்தரவிட்டார்.
கூட்டம் குறித்து, துணை மேயர் மகேஷ்குமார் கூறியதாவது:
மயான பூமிக்கு வருவோரிடம் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு தொடர்கிறது. பெசன்ட் நகர் போன்ற மயான பூமியில், ஆன்லைன் முன்பதிவு முறை இருந்தாலும், பெரும்பாலான மயான பூமியில் இல்லை. எனவே, அனைத்து மயான பூமியிலும், ஆன்லைன் முறையிலான முன்பதிவு முறையை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முன்பதிவுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ரசீது காண்பித்து, யாருக்கும் பணமும் கொடுக்காமல், மயான பூமியை பயன்படுத்த முடியும். பணியாளர்களுக்கு, போதிய அளவில் ஊதியம் வழங்க வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற தவறுகள் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.