புதிய ‘ அலெக்ரா வால்வு’ நோயாளிக்கு பொருத்தம்
சென்னை, இந்தியாவிலேயே முதல் முறையாக, புதிய தலைமுறை நுட்பத்துடனான, ‘அலெக்ரா வால்வை’ அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் ஜி.செங்கோட்டுவேலு கூறியதாவது:
சென்னையை சேர்ந்த 78 வயது நோயாளிக்கு, 2015ல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவை தோல்வி அடைந்ததால், கடுமையான வால்வு சிதைவுடன் அவதிப்பட்டு வந்தார்.
நோயாளியின் வயது மற்றும் நிலையை கருதி, இந்தியாவிலேயே முதல் முறையாக புதிய தலைமுறை நுட்பத்திலான, ‘டவி’ என்ற அலெக்ரா வால்வு பொருத்த திட்டமிடப்பட்டது.
இந்த, ‘டவி’ சிகிச்சையில் சாதகமான முடிவுகள் இருந்தாலும், பல சிக்கல்களும் உள்ளன. எனினும், நோயாளியின் நலன் கருதி, அறுவை சிகிச்சை வாயிலாக, சேதமடைந்த வால்வை உடைத்து, ‘அலெக்ரா வால்வு’ அந்நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
பின், நோயாளி நலமுடன் மறுநாள் வீடு திரும்பினார். இந்த அலெக்ரா வால்வு நீண்டகால பயன் தருவதுடன், ஏற்கனவே பொருத்தப்பட்டு செயலிழந்த வால்வுக்கு மாற்றான பலனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.